Thursday, May 15, 2014

கிராம நிர்வாக அலுவலகம் ★தமிழ்நாட்டிலிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய்த்துறையால் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,564 வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் என்பவர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
★கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்★★வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment